Sunday, March 10, 2013

பயணப்பொழுதுகள்…….








     வெகுநாட்களாயிற்று
     வெளியூர்ப் பயணம் போய்….
     காயப் போட்ட கரிச்சேலையாய்
     நீண்டு கிடக்கும் சாலைகள்…

     இரப்பர் உருளைகளைத் தேய்த்தபடி
     சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள்

     இயற்கையைப் புதைத்த
     இரகசிய மகிழச்சியில்
     வயற்காடுகளை அழித்து
     நாசமாக்கியதன் நினைவாக
வண்ணக் கற்கள்

     இலவச உணவுக்காக
     இருபது நிமிடமாய்
     காத்துக் கிடக்கும்
     பேருந்துகள்

     மாலை நாளிதழை மடித்துப்
     பேருந்துக் கண்ணாடியைத் துடைக்கும்
     மேட்டேல் பையன்கள்
    
     பட்ஜெட் பற்றாக்குறையால்
     கட்டிவந்த பொட்டலம் பிரிக்கும்
     திருவாளர் பொதுசனம்

     திரும்பத் திரும்ப
     ஒரே காட்சிகள் . . .
     இப்போதெல்லாம்
     பயணிப்பதைக்
     குறைத்துக் கொண்டேன்
 
     பயணிப்பதை விடப்
     பயணித்த பொழுதுகளில்
     பயணிப்பது சுகமானது